Total Pageviews

Saturday, July 30, 2011

ஆகா! இயற்கைதான் எவ்வளவு அழகான சுழற்சியை உருவாக்கியுள்ளது !!


நான் காலை வேளையில் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு எங்கள் வீட்டு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆடிப் பிறக்கும் சமயமாதலால் ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எங்கள் வீட்டுத் தரையிலும் நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. படித்தக் கொண்டிருந்த என்னுடைய கவனம் ஈக்களின் மேல் திரும்பியது.  அவை என் முகத்திலும் முதுகிலும் மொய்த்து படிக்க விடாமல் வம்பு செய்து கொண்டிருந்தன.  ஏன் இப்படி இவை ஆனி, ஆடி மாதங்களில் மட்டும் அதிகம் தோன்றி வம்பு செய்கின்றன என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் வீட்டுத் தரையில் பினாயில் கலந்த நீரைத் தெளித்து ஈயை ஓரளவுக்கு விரட்டலாம் என்று நாற்காலியில் இருந்து எழுந்திருக்க நினைத்தேன்.  அப்போது தரையில் ஒரு பல்லி கப்பென்று பாய்ந்து ஒரு ஈயைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தது.  


அதைப் பார்த்தவுடன் என் எண்ணம் இறைவனுடைய படைப்பிலும் இயற்கைச் சுழற்சியிலும் ஓட ஆரம்பித்தது. ஆகா! இயற்கைதான் எவ்வளவு அழகான சுழற்சியை உருவாக்கியுள்ளது குப்பை மேட்டிலே இந்த ஈக்கள் பிறக்கின்றன. அவை குப்பைக் கூளங்களையும் தின்பண்டங்களையும் மொய்த்து உயிர் வாழ்கின்றன.  அதை இந்த பல்லி பிடித்துத் தின்கிறது.  இந்தப் பல்லியை ஒரு கோழி பார்த்து விட்டால் லபக்கென்று கொத்தித் தின்று விடுகிறது.  அந்தக் கோழியை மனிதன் தின்று விடுகிறான்.  அந்த மனிதன் செத்து மடிந்தால், அவனுடைய அழுகிய பிணத்தில் இந்த ஈக்கள் தோன்றுகின்றன. 


இப்படி சிந்தித்துக் கொண்டே மீண்டும் தரையைப் பார்த்த போது இந்தப் பல்லி மட்டுமில்லாமல் மற்றுமொரு சிறு சிலந்திப் பூச்சியும் ஈக்களை பிடிக்க முயன்று கொண்டிருந்தது.  அதைப் பார்க்க எனக்கு வேடிக்கையாய் இருந்தது.  அந்தப் பல்லிக்காவது ஓரிரண்டு ஈக்கள் தின்னக் கிடைத்தது.  ஆனால் இந்த சிலந்திப் பூச்சிக்கு ஒரு ஈ கூட சிக்கவில்லை.  ஆனால் அப்படியும் அது தொடர்ந்து முயன்று கொண்டிருந்தது.  அது ஈயைப் பிடிக்க எடுக்கும் வழியினைப் பார்த்தால் மிகவும் சிறப்பாக இருந்தது. 
சிலந்திபூச்சி ஒரு ஈயை பிடிக்க எண்ணிவிட்டால் உடனடியாக மெதுவாக பதுங்கி பதுங்கி மிக மெதுவாக அந்த ஈயை நெருங்குகிறது. அந்த ஈயும் தரையை மொய்க்கும் கவனத்தில் இந்த சிலந்தியை கவனிப்பதில்லை. இந்த சிலந்தியும் மிக நெருங்கி இரண்டு அல்லது மூன்று செ.மீ. இடைவெளியே உள்ள சமயத்தில் கபீரென்று ஒரே பாய்ச்சல் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தது.  ஆனால் , பாவம்  அந்த சிலந்திக்கு அந்த ஈ கிடைக்கவில்லை. அந்த ஈயும் கண்ணிமைக்கும் நேரத்தில் சர்ரென்று பறந்து விட்டது.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம் தாங்கவில்லை.  ஓடிப் போய் நாலைந்து ஈயை பட் பட்டென்று அடித்துப் போட வேண்டும் போல துடிப்பு எழுந்தது.  அனால் அப்படிச் செய்தால் எங்கே அந்தச் சிலந்தி ஓடி விடுமோ என்று நான் நாற்காலியை விட்டு எழவில்லை. அந்த சிலந்தி எப்பொழுதுதான் ஒரு ஈயை பிடிக்கிறது என்று பாப்போம் என்று எண்ணிக்கொண்டு நான் உறுதியாக நாற்காலியை விட்டு அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அனால் அந்தச் சிலந்தி தன் பொறுமையை இழக்காமல் அமைதியாக அடுத்த ஈயை நோக்கி குறி செலுத்தி மெதுவாக நகர்ந்தது.  இப்பொழுதும் மேலே சொன்ன அனைத்துப் பொறுமையோடும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.  

இப்போதும் மிக நெருங்கிய தூரத்தில் ஈ மீது சிலந்தி பாய்ந்தது. புத்திசாலி ஈ பறந்தது. முட்டாள் சிலந்தி ஏமாந்தது. அனால் சிலந்தி தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்த ஈயை பிடிக்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. என் மனதுள் மாபெரும் ஆச்சரியமும் சிந்தனையும் அலை மோதின. மனதில் பல எண்ணங்கள் அலை பாய்ந்தன. ஆகா! இந்தச் சிலந்திக்கு இருக்கும் பொறுமையும் தோல்வியைத் தாங்கும் சகிப்புத்தன்மையும் மனிதரில் பலருக்கு இல்லையே! இருந்திருந்தால் நிச்சயம் என்றாவது ஒரு நாள் வெற்றி பெறுவர். அனால் பலர் தங்கள் அடைய நினைத்தவற்றை ஒரே ஒரு முறை முயன்று அடைய முடியாவிட்டால் ஓர் ஓரத்தில் ஒடுங்கி விடுகிறார்கள். தோல்வியைத் தாங்கும் பலமில்லாமல் தற்கொலை செய்து கொள்ள ஓடுகின்றனர். வாழ்க்கையின் விரக்தி எல்லையை எட்டி விட்டதாக நினைத்து மூலையில் முடங்கி விடுகிறார்களே! அவர்கள் அனைவரும் இது போல ஒரே ஒரு ஈயைப் பிடிக்க ஒரு சிலந்தி படும் பாட்டைப் பார்த்தால் நிச்சயம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழக்க மாட்டார்கள் என்று பலவிதமாக சிந்தித்தவாறு மீண்டும் சிலந்தி ஈ பிடிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து கவனிக்கலானேன். இவ்வாறாக அரை மணி நேரம் வரை சிலந்தி ஈ பிடிக்கும் முயற்சியை பார்த்துக் கொண்டு பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment